மேகதாதுவின் குறுக்கே அணை கட்டப்படுகிறதா? - ஆய்வு செய்ய குழு அமைப்பு
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் உள்ள காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அணை கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
மேலும் வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாமல் அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு என கொல்லப்பட்ட நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இதனை விசாரித்தது.
இதில் மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூலை 5 தள்ளிவைக்கப்பட்டது.