'இறைவன் போட்ட பிச்சை' - நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதவிய இசையமைப்பாளர் டி இமான்!

Tamil Cinema D Imman Tamil nadu Cuddalore
By Jiyath Sep 25, 2023 09:15 AM GMT
Report

இசையமைப்பாளர் டி இமான் கடலூர் மாவட்டத்தில் உள்ள 6 நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதவியுள்ளார். 

டி இமான்

திரைப்பட இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்து வருபவர் டி இமான். கடந்த 2002ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் 'தமிழன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் அவர் இசையமைத்த 'விசில்' என்ற திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார். இவரின் இசையமைப்பில் வெளிவந்த 25வது படம் மருதமலை. தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மைனா, கும்கி, மாசிலாமணி, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், போகன், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் டி இமான்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியில் உள்ள நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்துள்ளார் டி இமான். அப்பகுதியில் நரிக்குறவர்கள் வசிக்கும் வீடுகள் சேதம் அடைந்து காணப்பட்டதாக, சமூக ஆர்வலரான செல்வம் உமா மூலம் தகவலை அறிந்துள்ளார் டி இமான்.

கடவுள் போட்ட பிச்சை

இதனையடுத்து ரூ. 2 லட்சம் மதிப்பில் 6 குடும்பங்களுக்கு குடிசை வீடுகள் சீரமைத்து 3 வீடுகளுக்கு தார்பாய்கள் மற்றும் மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை தொடங்கி வைத்து நோட்டு புத்தகங்கள் வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு நரிக்குறவர்கள் பாசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று விஸ்வாசம் படத்திலிருந்து 'கண்ணான கண்ணே' பாடலையும் அவர் பாடினார். இதுகுறித்து டி இமான் கூறுகையில் "இறைவன் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் எல்லாமே கொடுத்துள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி, பிறகு பெரிய திரைக்கு வந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.


தேசிய விருது, மாநில விருது, கலைமாமணி விருது என அனைத்தையும் இறைவன் கொடுத்துள்ளார். இதையெல்லாம் இறைவன் எனக்கு போட்ட பிச்சையாகத்தான் நான் பார்க்கிறேன். எனவே கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று டி இமான் கூறியுள்ளார்.