இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் - கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் சூழலில் தற்போது அதிமுக இருக்கின்றது.
அதிமுக
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது என்றே கூறலாம். கடந்த தேர்தல்களில் பாஜகவின் கூட்டணி தான் அதிமுகவின் பின்னடைவிற்கு என பல பத்திரிகைகள் எழுதிய நிலையில், அந்த விமர்சனத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே கூறலாம்.
அதே போல சிறுபான்மையினரின் வாக்குகளை ஈர்க்கும் வகையில் கோவையில் நிகழ்ச்சி, சென்னையில் கிறிஸ்தமஸ் விழா போன்ற முன்னெடுப்புகளை அதிமுக தீவிரமாக கையாண்டு வருகின்றது.
இதன் காரணமாக மட்டுமே வாக்குகளை ஈர்த்திடுமா.? என்றால் அது கேள்விக்குரியது தான். தற்போது வரை புரட்சி பாரதம் கட்சி அண்மையில் பொதுக்கூட்டம் நிகழ்த்தி தங்கள் அதிமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம் என்று தெரிவித்த நிலையில், அண்மையில் தேமுதிக கட்சியின் புது பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள பிரேமலதா தனக்கு ஜெயலலிதா தான் எடுத்துக்காட்டு என்று கூறுவது அவர்கள் அதிமுக கூட்டணிக்கு நகருகிறார்களா.? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
எதிர்பார்ப்பு
திமுகவை வலுவாக எதிர்க்க அதிமுகவிற்கு வலுவான கூட்டணிகள் தேவை. சில தினங்கள் முன்பு அதிமுக மூத்த நிர்வாகி ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், தான் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூடுகிறது.
கட்சியின் வருங்கால கூட்டணி முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாத நிலையில், இன்றைய தினம் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுப்பார் என்றே பலரும் எதிர்நோக்கி உள்ளனர்.