டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு - விசாரணையில் வெளியான புதிய தகவல்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பிற்கான காரணத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சைரஸ் மிஸ்திரி
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி (54) கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் சென்றுக் கொண்டிருந்த கார் எதிர்பாராமல் மும்பைக்கு அருகே பல்கர் என்னும் இடத்தில் உள்ள சூரியா நதியில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் கார் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்
சைரஸ் மிஸ்திரியின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “சைரஸ் மிஸ்திரியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தொழில் நிறுவனத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டார்.
உயிரிழப்பிற்கு காரணம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பிற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி, சீட் பெல்ட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. முன் இருக்கையில் இருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.