தீபாவளியை ஒட்டி புதிய புயல்.. எங்கெல்லாம் பாதிப்பு - எச்சரிக்கை!
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய புயல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 23ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், கரூர், நாமக்கல் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று மட்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்,
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுபெறக்கூடும் என்றும்
இதனால், மாலத்தீவு, குமரி, அந்தமான், இலங்கை வங்கக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேக சூறாவளி வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.