நெருங்கி வரும் 'மிக்ஜம்' புயல்..100 கி.மீ வேகத்தில் சூறாவளி - எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை?
'மிக்ஜம்' புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல்
கடந்த மாதம் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள புயல் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மேலும், இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 5ம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் பழைய கட்டடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேலும், 'மிக்ஜம்'புயல் நாளை மறுநாள் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.