வலுவிழந்தது ஜாவத் புயல் தப்பியது ஆந்திரா,ஒடிசா மாநிலங்கள்

Cyclone Indian Jawad Meterological Centre
By Thahir Dec 04, 2021 01:44 PM GMT
Report

ஜவாத் புயல் வலுவிழந்த நிலையில், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது.

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மழை, வெள்ளம், நிலச்சரிவு என மக்கள் அடுத்தடுத்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்,

பின் புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த புயலுக்கு ஜவாத் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது.

ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ந்தேதி ஒடிசாவிலும், டிசம்பர் 5ந்தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கார்வார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜவாத் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.

மொத்தம் 64 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 52 குழுக்கள் மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், புயலுடைய தீவிரம் மற்றும் காற்றின் வேகம் குறைந்துள்ளது. விசாகப்பட்டின நகரத்தில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது.