நாளை கரையை கடக்கிறது ஜாவத் புயல் - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

Cyclone Indian Meteorological Jawad
By Thahir Dec 04, 2021 12:59 PM GMT
Report

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜோவத் புயல் தீவிரடைந்து வருவதாகவும் நாளை ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை உருவானது.

இது அந்தமான் கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை நிலவியது. இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது.

தொடா்ந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து புயலாக வலுப்பெற்றது. ஜோவத் என்று பெயரிப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை ஒரிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜோவத் புயல் கடந்த 1 மணிநேரத்தில் வடக்கு நோக்கி நகர்வதைக் காண முடிகிறது. அடுத்த 12 மணிநேரத்திற்கு அதே நிலை தொடரும்.

புயலின் தீவிரத்தை பொறுத்து மேலும் வலுவடையும். இந்த புயல் நாளை ஒடிசா மாநிலம் புரியின் கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும்.

மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சிலவேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்லவேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளது.