தமிழகத்தை மிரட்ட வரும் சூறாவளி - கொட்டப்போகும் கனமழை...மக்களே அலெர்ட்!
அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.
பிறகு மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ந் தேதி தமிழக - புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 4ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
5ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.