விஜய் பேசுவது போன்ற AI வீடியோ: சைபர் க்ரைம் எச்சரிக்கை

Vijay
By Fathima Sep 02, 2026 12:54 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது போன்ற AI வீடியோ தொடர்பில் சைபர் கிரைம் போலிசார் எச்சரிக்கை செய்தி

இதுகுறித்து தமிழக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கை,

சி.பி.சி.ஐ.டி சைபர் க்ரைம் செல் ஆய்வாளர் சமூக வலைதளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக கண்காணித்து கொண்டிருந்தபோது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகத்தளங்களில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசுவதுபோல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று இந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தக் காணொளியில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கபட்டிருந்தது.

விஜய் பேசுவது போன்ற AI வீடியோ: சைபர் க்ரைம் எச்சரிக்கை | Cyber Crime Case Registered Mimicking Cm Vijay

மேற்படி சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான ஐடி மற்றும் அது தொடர்பான பதிவுகள் குறித்த தகவல்களைப் பெற மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இப்போலி காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ காணொளிகள் பேஸ்புக் மட்டுமின்றி, மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

மேலும், இக்காணொளிகளில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த பேஸ்புக் ஐடிகளிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

மேலும், அவற்றில் பகிரப்படும் வாட்ஸ் அப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டிப்பேக் காணொளிகளில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

மேலும், இதுபோன்ற இணையவழி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாதுகொள்ளும் வகையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் இத்தகவலை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.