சி.வி.சண்முகத்துக்கு உடனடி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
2006 சட்டமன்ற தேர்தல் காலத்தில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அதில் தனது சகோதரரும் மைத்துனரும் உயிரிழந்ததாகவும் சி.வி.சண்முகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை
அந்த சம்பவத்துக்குப் பிறகு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2021-ல் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், சென்னை மற்றும் விழுப்புரம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி, வழக்குகளையும் புகார்களையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரினார்.
ஆனால், மிரட்டல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பல்வேறு வகையில் இருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இருப்பதை கருத்தில் கொண்டு, சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.