தப்பு செய்தால் கை, கால்களை வெட்டுவோம் - தலிபான்கள் அதிரடி அறிவிப்பு
தங்களது ஆட்சியில் கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் அங்கு தற்காலிக அரசையும் அமைத்துள்ளனர்.
ஆனால் இதுவரை தாலிபான் அரசு பதவி ஏற்கவில்லை. இதனிடையே தாலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி சமீபத்தில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லை.
எங்களது ஆட்சியில் கை, கால்களைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும். மேலும் என்ன மாதிரியான தண்டனைகள் எல்லாம் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்.
எங்கள் தண்டனை முறை அமைதியையும், நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டத்திட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது. எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை என அவர் கடுமையாக பேசியுள்ளார்.