‘திரும்பி பார்க்காதே’ - ஆப்கானில் திரை கட்டிய வகுப்புகள் ஆரம்பம்
ஆப்கானிஸ்தானில் ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரைகளை கட்டி வகுப்புகள் நடப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கிய நிலையில் அங்கு 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பெண்களுக்கான உரிமைகள், கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாலிபானின் கல்வி ஆணையம் அந்நாட்டின் கல்வி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அல்லது நல்ல குணமுள்ள முதிய வயது ஆண் ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, மேலும் ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக நுழைவுவாயில், மாணவர்கள் வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே மாணவிகள் வெளியே செல்ல அனுமதி, நிகாப், புர்கா உடைகள் கட்டாயம் ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன.