மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா?..வெளியான அதிர்ச்சி தகவல்
மீண்டும் ஊரடங்கு என பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியாவில் 19 மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏறுமுகமாக உள்ளதாகவும் இந்த மாநிலங்களில் தமிழகமும் அடங்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 1000 பேர் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டமாக பங்கேற்றதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், தற்போது அரசியல் பிரச்சாரங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் பங்கேபதால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை போலவே இந்த ஆண்டு மார்ச் மாதமும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கவனிப்பு மையம் தொடங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் முதலில் பரவிய கொரோனா நோயே தற்போதும் பரவுவதாகவும், வேறு வடிவத்தில் உருமாறிய கொரோனா இங்கு பரவவில்லை என்றும் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாகவும், சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர், அடையார் அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.