தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, ஏப்ரல் 10-ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் அமல் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தது.
இன்று மாலை பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லரை வியாபாரத்திற்கு தடை. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இறுதி ஊர்வலங்கள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி. வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களை வைத்து மட்டுமே இயங்க வேண்டும். திரையரங்குகள் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த தற்போது 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட போக்குவரத்தில் இருக்கை அளவுடன் மட்டுமே பயணிகளை ஏற்றி பயணிக்க வேண்டும். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் முறை தொடரும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.