கொழும்புவில் ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல்... இலங்கை முழுவதும் ஊரடங்கு

Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Government
By Petchi Avudaiappan May 09, 2022 10:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் காட்டி வருகின்றனர்.

இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கா, சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் இருந்து உதவி பெற முயன்று வருகிறது. இந்தியா சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் அரசு பதவிகளில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு சில தினங்களுக்கு முன் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார். 

இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார். முன்னதாக கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டு பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் போராட்டக்காரர்களை ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது . உடனடியாக போலீசார் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இதனையடுத்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.