தமிழகத்தில் முழு ஊரடங்கா? தமிழக அரசு இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியீடு
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 13,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஏற்கெனவே தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கையும் கடந்த 20ம் தேதி முதல் அமல்படுத்தியது.
நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டார். நேற்று தமிழக முதல்வர் பழனிசாமியை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்றார். அப்போது தமிழக முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேர ஊராடங்கு நேரத்தை அதிகாரிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும், இன்று மாலை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.