ரேஷன் அரிசி அதிகமாக கடத்துறாங்க... தமிழக முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் அவ்வப்போது ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் போது போலீசாரிடம் பிடிபடுவது வழக்கம். என்னதான் ஆட்சி மாறினாலும் இந்த கடத்தல் சம்பவம் மட்டும் முடிவுக்கு வருவதாக இல்லை. இதனிடையே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகள் வழியாகவும் , வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வழியாகவும் ஆந்திர மாநிலத்திற்கு இருசக்கர வாகனம் முதல் லாரிகள் வரை ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுகிறது. இதனால் கடந்த 16 மாதங்களில் 13 வழக்குகள் எனது குப்பம் தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பம் அருகே உள்ள குருசு என்ற இடத்தைச் சேர்ந்த பொதுமக்களே தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியுடன் வந்த வாகனத்தை சிறைபிடித்து குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்த கடித விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.