பள்ளிக்கு செல்ல பேருந்து இல்லாமல் பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள் - மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேமாத்தூர் கிராமத்திற்கு விருத்தாச்சலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து கொளஞ்சியப்பர் கோவில், கண்டபங்குறிசி,
நல்லூர், வண்ணார்தூர் ஆகிய கிராமத்தின் வழியாக மேமாத்தூர் வரையில் ஒரு நாளைக்கு 3 நேரங்களில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
காலை 9 மணிக்கு தடம் எண் 7-ம் நம்பர் பேருந்து, மதியம் ஒரு மணிக்கு தடம் எண் 22-ம் நம்பர் பேருந்தும், மாலை 5 மணிக்கு மீண்டும் 7-ம் நம்பர் பேருந்தும் இயக்கப்படுகின்றன.
மேமாத்தூர் கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேமாத்தூர், தருசு, வண்ணார்தூர் ஆகிய கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அங்கிருந்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியிலும் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். காலை 9 மணிக்கு வரும் பேருந்தில் பயணம் செய்தால் மட்டுமே நேரத்தில், பள்ளிக்கு செல்ல முடியும்.
அங்கிருந்து நல்லூர், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு காலை 9 மணிக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதேபோன்று மாலையில் பள்ளி கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கும், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் சென்ற பொதுமக்கள் மீண்டும் வீட்டிற்கு செல்ல, மாலை நேரத்தில் 5 மணிக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஆனாலும் காலை மாலை என சரியான முறையில் அந்த கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படாமல், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள், மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் பலரும்,
நீண்ட நேரம் காத்திருந்து அந்த வழியே வரும் இரண்டு சக்கர வாகனம், கார், டாட்டா ஏசி, போன்ற வாகனங்கள் வருவதை பார்த்து கையை நீட்டி மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவிகள் முன்பின் தெரியாதவர்கள் வாகனத்தை மறித்து அதில் பயணம் செய்து ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்கின்றனர்.
இதேபோன்று மாலையில் 5 மணிக்கு இயக்கப்படும் பேருந்து வராமல் மாணவர்கள் வீட்டிற்கு வருவதற்கு, நல்லூரில் இருந்து 4 கிலோமீட்டர் நடந்தே வீடு திரும்புகின்றனர்.
ஒரு வாரத்தில் 3, அல்லது 4 நாட்கள் மட்டுமே சரியான முறையில் பேருந்து இயக்கப்படுகின்றன.
பலமுறை விருத்தாச்சலம் அரசு பேருந்து பணிமனையில் மேலாளரிடம் நேரில் சென்று கேட்டபோது வாகனம் இயக்குவதற்கு ஓட்டுனரும் நடத்துனரும், இல்லாததால் பேருந்து இயக்கப்படவில்லை என்று தொடர்ச்சியாக பதில் கூறுகின்றனர்.
இன்று காலை 9 மணி நேரத்திற்கு வரும் ஏழாம் நம்பர் இருந்தும், ஒரு மணிக்கு வரும் 22-ம் நம்பர் பேருந்தும் வரவில்லை. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் பலரும் தினம் தினம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே விழுப்புரம் போக்குவரத்து கோட்டம் கழக தலைமை மேலாளர் தனிக்கவனம் செலுத்தி தற்போது இயங்கும் பேருந்து தடையில்லாமல் வந்து செல்லவும்,
கூடுதல் பேருந்து இயக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.