கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி - தலைமறைவான கடலூர் திமுக எம்பி

cuddalore dmkmpramesh
By Petchi Avudaiappan Oct 08, 2021 07:23 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கடலூர் திமுக எம்.பி.யின் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாமக நிர்வாகியான கோவிந்தராஜ் என்பவர் கடலூர் திமுக எம்.பி. டிஆர்வி ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்  கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவரை எம்.பி.யும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனிடையே  பாமக பிரமுகரான வழக்கறிஞர் கே பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் உடலை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.

மேலும் கோவிந்தராஜ் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். கடலூர் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா உடன் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினார்கள்.

இதில் சம்பவம் நடந்த மறுநாளான செப்டம்பர் 20 ஆம் தேதி காடம்புலியூர் காவல் நிலையத்தின் பொறுப்பு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சில தொழிலாளிகளிடம் விசாரணை செய்தபோது கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்து கொடுமை செய்தார்கள் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய கேஸ் டைரியும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் சம்பவம் நடந்த இரவில் கோவிந்தராஜை காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கோவிந்தராஜை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றை சேகரித்துக் கொண்ட கடலூர் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரின் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது.

இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.