ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி - ரசிகர்கள் உற்சாகம்
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
நவி மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 17 ரன்களிலும், மொயீன் அலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தொடர்ந்து களம் கண்ட ஷிவம் டூபே, ராபின் உத்தப்பா இருவரும் பெங்களூர் பந்துவீச்சை சிதறடித்தனர்.
பவுண்டரி ,சிக்சருக்கு பந்துக்கள் பறக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. உத்தப்பா 88 ரன்களில் அவுட்டாக, ஷிவம் டூபே 94 ரன்கள் குவித்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து கடினமான இலக்குடன் களம் கண்ட பெங்களூரு அணி சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தும் தடுமாறியது. அந்த அணியில் ஷபாஸ் அகமது 41, தினேஷ் கார்த்திக் மற்றும் பிரபுதேசாய் 34, மேக்ஸ்வெல் 26 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இதனால் 20 ஓவர்களில் பெங்களூரு அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.