தொடரும் மும்பை அணியில் தோல்வி - கலக்கிய பினிஷர் தோனி : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings Mumbai Indians IPL 2022
By Petchi Avudaiappan Apr 21, 2022 06:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நவிமும்பையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2 வது  பந்தில் கேப்டன் ரோகித் சர்மா, 5 வது பந்தில் இஷான் கிஷன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து  அதிரடி வீரர் ப்ரீவிசை 4 ரன்களில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறிய மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி நிதானமாக ஆடி மீட்டனர். சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் வெளியேற, திலக் வர்மா அரைசதம் அடித்தார். 

இறுதியாக க்ரித்தீக் சோகீன் 25 ரன்கள் அடிக்க  மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

அந்த அணியில் ருத்துராஜ் ரன் ஏதும் எடுக்காமலும், சாண்ட்னர் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற அம்பத்தி ராயுடு - உத்தப்பா ஜோடி அதிரடி காட்டினர். உத்தப்பா 30 ரன்களும், அம்பத்தி ராயுடு 40 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். அடுத்து வந்த ஷிவம் டூபே 13, கேப்டன் ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக தோனி தனி ஆளாக போராடினார். 

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி அடித்து கடைசி பந்தில் அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதேசமயம் விளையாடிய  7 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.