மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி கண்ணீர்
குஜராத் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிரட்டல் வெற்றியை கேப்டன் தோனிக்கு அர்பணிப்பதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்களும், சஹா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது.
இதன்பின் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு, போட்டியை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதால் போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 171ஆக நிர்ணயிக்கப்பட்டது.
90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு டீவன் கான்வேவும் – ருத்துராஜ் கெய்க்வாட்டும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
கெய்க்வாட் 26 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கான்வே 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களமிறங்கிய ரஹானே 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். சீனியர் வீரரான அம்பத்தி ராயூடு மோஹித் சர்மா வீசிய போட்டியின் 13வது ஓவரின் முதல் மூன்று பந்தில் 16 ரன்கள் குவித்து போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு மொத்தம் 8 பந்துகளில் 19 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த தோனி கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் மோஹித் சர்மாவின் பந்தில் விக்கெட்டை இழந்து ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர்.
இதன் மூலம் கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை சென்னை அணி சந்தித்தது.
14வது ஓவரில் சென்னை வீரர்கள் 7 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை சென்னை அணி சந்தித்தது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரின் முதல் 4 பந்தையும் மோஹித் சர்மா கச்சிதகாக வீசியதால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக இக்கட்டான நிலையை சென்னை அணி சந்தித்தது.
சென்னை அணிக்கு வெற்றி சாத்தியமே இல்லை என கருதிய குஜராத் அணியின் பயிற்சியாளர்கள் வெற்றியை கொண்டாட துவங்கியிருந்த நிலையில், கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 5வது பந்தில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை அணிக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்று கொடுத்தார்.
இதன் மூலம் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, சென்னை அணியின் இந்த வெற்றியை கேப்டன் தோனிக்கு அர்பணிக்க விரும்புவதாக பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.