மாஸ் காட்டிய சென்னை அணி - அடிமேல் அடிவாங்கும் பெங்களூரு...அய்யோ பாவம்..!
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் படிக்கல் 70 ரன்களும், கேப்டன் விராட் கோலி 53 ரன்களும் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை அணி 157 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட், டூபிளிசிஸ் இருவரும் பெங்களூரு பந்துவீச்சை அடித்து ஆடி சிறப்பான தொடக்கம் அமைத்தனர். கெய்க்வாட் 38 ரன்களும், டூபிளிசிஸ் 31 ரன்களும், அம்பத்தி ராயுடு 32 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும், சுரேஷ் ரெய்னா 17 ரன்களும், கேப்டன் தோனி 11 ரன்களும் எடுக்க 18.1 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஹர்ஷத் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 14 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ள நிலையில் சென்னை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.