ஐபிஎல் தொடர் மீண்டும் தொடக்கம் : சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டித் தொடர் இன்று மீண்டும் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மே 3 ஆம் தேதியுடன் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது. இதனையடுத்து மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நடக்கவுள்ளது.
இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதவுள்ளது. புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறி விடும்.
அதேசமயம் மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளதால் எஞ்சிய 6 போட்டிகளில் 4ல் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இப்போட்டி ரசிகர்களிடையே அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.