சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற லக்னோ அணி..!
15 வது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ரன்களும்,சிவம் துபே 49 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.
லக்னோ அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல் 40 ரன்களும், டி காக் 61 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இதன்பின் வந்த தீபக் ஹூடா மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்தாலும்,
ஈவன் லீவிஸ் மற்றும் அயூஸ் பதோனியின் மிரட்டலான ஆட்டத்தால் இமாலய இலக்கை 19.3ஓவரிலேயே அசால்டாக எட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
லீவிஸ் 23 பந்துகளில் 55 ரன்களுடனும், பதோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சென்னை அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.