குஜராத்திடம் போராடி தோற்றது சென்னை அணி - ரசிகர்கள் அதிர்ச்சி..!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
15வது ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரசீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 73 ரன்களும், அம்பத்தி ராயூடு 49 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 48 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் சென்னை அணி இந்த போட்டியில் அசால்டான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 6வது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – ரசீத் கான் ஜோடி, குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கடைசி ஓவர் வரை நங்கூரமாக நின்ற டேவிட் மில்லர் 51 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 94* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இலக்கை அசால்டாக எட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணியில் அதிகபட்சமாக டூவைன் பிராவோ 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷன்னா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.