சுட்டிக்குழந்தை சாம் கரணுக்கு பதில் தரமான வீரரை தட்டி தூக்கிய சென்னை அணி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சென்னை அணி வீரர் சாம்கரணுக்கு பதிலாக டாமினிக் ட்ரேக்ஸ் என்னும் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனிடையே கடந்த ஐபிஎல் தொடரில் அசத்திய சென்னை அணியின் சுட்டிக்குழந்தை என அன்போடு அழைக்கப்பட்ட சாம் கரண் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
அவர் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 50 ரன்களுக்கு அதிகமாகவே விட்டு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து சாம் கரண் விலகியுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியானது.
இதனால் சாம் கரணுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிசிசிஐயிடம் அனுமதி கோரியிருந்தது.இதற்கு பிசிசிஐ அனுமதியளிக்க வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த டாமினிக் ட்ரேக்ஸ் என்னும் இளம் வீரர் அணியில் சேர்க்கப்படுவதாக சென்னை அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் அடுத்த போட்டியில் இவர் அணியில் சேர்க்கப்படுவார் என சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.