நீங்க திருந்தவே மாட்டீங்களா... வழக்கம்போல சொதப்பிய சென்னை அணி...ரசிகர்கள் கோபம்
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் வழக்கம்போல சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவன் கான்வே 16 ரன்களில் அவுட்டானார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் வேகமாக ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் ஜெகதீஷன் (1), அம்பத்தி ராயூடு (3), சாண்டனர் (1) ரன்கள் எடுத்து அவுட்டாயினர். கடைசி கட்டத்தில் தோனி 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக மெக்காய், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் 6 ஓவர்களில் 72 ரன்கள் குவித்திருந்த சென்னை அணி அடுத்த 14 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.