தோனிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் இவர் தான் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐபிஎல் தொடரில் வரும் காலத்தில் சென்னை அணி கேப்டனாக யார் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் சென்னை அணி கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோரை தக்க வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த தொடருடன் கேப்டன் தோனி ஓய்வுப் பெற்றால் சென்னை அணியின் அடுத்த கேப்டனை இந்த தொடரில் இருந்தே தயார் செய்ய வேண்டிய நிர்பந்தமும் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முயற்சிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற நிலையில் குயிண்டன் டி காக் இதற்கு சரியாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இவர் 77 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் 16 அரைசதங்கள் உட்பட 2256 ரன்களை அடித்துள்ளார். அதேசமயம் ஸ்ரேயாஸ் அய்யரும் 87 போட்டிகளில் விளையாடி 16 அரை சதம் உட்பட 2375 ரன்கள் எடுத்துள்ளார். அவர் மிடில் ஆர்டரில் அல்லது நம்பர் 3 இல் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்.
இதனைத் தவிர்த்து சென்னை அணி வேறு சில பிளான்களையும் கையில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் நடைபெறவுள்ள ஏலத்தில் எப்படியும் இதற்கு விடை கிடைத்து விடும் என எதிர்பார்க்கலாம்.