சென்னை அணியில் தோனி இல்லையா? - தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம் இதோ...

ஐபிஎல் தொடரின் அடுத்த 3 சீசன்களுக்கு சென்னை அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைவதோடு, மெகா ஐபிஎல் வீரர்கள் ஏலமும் நடைபெற உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணியின் 3 முதல் 4 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள். 

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழும் சென்னை அணி கேப்டன் தோனியை முதல் ஆளாக தக்கவைக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால்  முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி ஊதியமாக தரவேண்டும் என்பதால் தன்னை அவ்வளவு பணம் கொடுத்து தக்க வைக்க வேண்டாம் என தோனி கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் அடுத்த 3 சீசன்களுக்கு கேப்டன் தோனியை தக்க வைக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரோடு சேர்த்து ஆல் ரவுண்டர் ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்க வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. 

பிசிசிஐ விதிகளின்படி ஒரு அணி 3 இந்திய வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்கலாம். இதனால் 4ஆவது வீரராக இங்கிலாந்தின் மொயின் அலி தக்க வைக்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவதாகவும் இது குறித்து அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை சில காரணங்களால் மொயின் அலி சென்னை அணியின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் கரனை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்பதால் இன்னும் சில நாட்களில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்