ஐபிஎல் கிரிக்கெட்:சென்னை அணி அட்டகாசமான முதல் வெற்றி

csk victory ipl2021 pbks
By Praveen Apr 16, 2021 05:17 PM GMT
Report

  ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து 7.30 மணிக்கு துவங்க இருக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால்(0) பவுல்ட் ஆனார். இதையடுத்து தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கே.எல்.ராகுல்(5) ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கிறிஸ் கெய்ல் 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, தீபக் ஹூடா(10), நிக்கோலஸ் பூரன்(0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுபுறம் சாருக்கான் சற்று நிதானமாக ஆடி 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார்.

அரைசதத்தை நெருங்கிய சாருக்கான், சென்னை வீரர் சாம் கர்ரனின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதற்கடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாத நிலையில், பஞ்சாப் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது. இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாருக்கான் 47 ரன்கள் அடித்திருந்தார்.

சென்னை அணியில் அதிகபர்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 107 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 15.4 ஓவர்களில் 107 ரன்களை விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும்,டூ பிளெஸ்ஸிஸ் 36 ரன்களும் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தனது முதல் வெற்றியையும் பஞ்சாப் அணி முதல் தோல்வியையும் பதிவு செய்துள்ளன.