2018 ஐபிஎல் போட்டியில் தோனி செய்த மறக்க முடியாத சம்பவம் - வெளிவந்த உண்மை
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி செய்த செயல் குறித்து அந்த அணியில் விளையாடிய சக வீரர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை அணி கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட் செய்த சென்னை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் களம் கண்ட சென்னை அணி சாம்பியன் ஆனதை இன்றளவும் சென்னை அணி ரசிகர்களால் மறக்க முடியாது.
இதனிடையே இந்த இறுதிப்போட்டியில் தோனி செய்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை அணியில் இடம் பெற்ற சக வீரர் லுங்கி இங்கிடி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போது அந்த அணி வீரர் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார். அப்போது 17வது ஓவரை வீச நான் வந்தேன். ஆனால் தோனி என்னிடம் எதுவும் கேட்காமல் அவரே ஃபீல்டிங் செட் செய்தார். இதன் காரணமாக அடுத்த இரண்டு பந்துகளில் தீபக் ஹுடாவின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடிந்தது.
இறுதிப்போட்டியில் அப்படி ஒரு பதட்டமான நிலைமையிலும் தோனி மிக அருமையாக முடிவெடுத்து சக வீரர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய விஷயங்களை செய்ததை அப்போது தான் நான் கவனித்தேன் என லுங்கி இங்கிடி கூறியுள்ளார்.