ஐபிஎல் சீசனில் கடைசி இடம் யாருக்கு? - அவமானத்தை தவிர்க்க போராடும் சென்னை, மும்பை அணிகள்
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் கடைசி இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல், அம்பயர்களின் தீர்ப்பு சர்ச்சை, சாம்பியன் அணிகளின் தொடர் தோல்வி என பல பரபரப்புகளை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மொத்தம் 10 அணிகள் போட்டியிட்ட இத்தொடரில் முதல்முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மற்ற 2 இடங்களுக்கு பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இதில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி 13 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 10 தோல்விகளுடன் கடைசி இடத்தையும், நடப்பு சாம்பியன் சென்னை அணி 13 போட்டிகளில் ஆடி 4 வெற்ற்இ, 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தையும் பெற்றுள்ளது.
தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணி டெல்லியையும், சென்னை அணி ராஜஸ்தானையும் எதிர்கொள்ளவுள்ளது. சென்னை 9வது இடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் ராஜஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும். அப்படியே தோற்றாலும் மோசமான தோல்வியாக இருக்கக்கூடாது. இல்லையென்றால் அந்த இடத்துக்கு சிக்கல் வந்து விடும்.
இதேபோல் மும்பை அணி 9வது இடத்தை பிடிக்க டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.அப்படி இல்லையென்றால் டெல்லி நிர்ணயிக்கும் இலக்கை 14 ஓவருக்கு எட்டினால் அந்த இடத்தை பிடிக்கலாம்.
5 முறை சாம்பியனான மும்பை அணியும், 4 முறை சாம்பியனான சென்னை அணியும் அவமானத்தை தவிர்க்க போராடி வருவது அந்த அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.