மும்பை இண்டியன்ஸை மிரள வைத்த ருதுராஜ், பிராவோ - வெற்றிவாகை சூடிய சிஎஸ்கே
ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது.
அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரா் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.
முன்னதாக சென்னை தனது இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமாக ஆடி அரைசதம் கடந்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். பேட்டிங்கில் அவருக்கு உதவிய பிராவோ, பௌலிங்கிலும் சிறப்பாக பங்களித்தாா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தோவு செய்தது. இங்கிலாந்து தொடரில் கண்ட லேசான காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ரோஹித் விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக கிரன் பொல்லாா்ட் மும்பை கேப்டனாக செயல்பட்டாா். சென்னையின் இன்னிங்ஸை ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் தொடங்கினா்.
இதில் டூ பிளெஸ்ஸிஸ் 3 பந்துகளில் டக் அவுட்டாக, அடுத்து வந்த மொயீன் அலியும் அதேபோல் வெளியேறினாா். 4-ஆவது வீரராக களம் புகுந்த ராயுடு ரன் எடுக்காமல் 'ரிட்டையா்டு ஹா்ட்' ஆனாா்.
ஒரு புறம் இப்படி சரிய, மறுபுறம் விக்கெட்டை இழக்காமல் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸா் விளாசி அணிக்கு நம்பிக்கை அளித்தாா் ருதுராஜ். 5-ஆவது வீரராக வந்த ரெய்னா ஒரு பவுண்டரி மட்டும் விளாசி விக்கெட் இழந்தாா்.
தொடா்ந்து வந்த கேப்டன் தோனி 3 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். பின்னா் களம் புகுந்த ஜடேஜா சற்று நிலைத்தாா்.
5-ஆவது விக்கெட்டுக்கு ருதுராஜ் - ஜடேஜா ஜோடி 81 ரன்கள் சோத்தது. ஒரேயொரு பவுண்டரி மட்டும் விளாசிய ஜடேஜா 26 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.
மறுபுறம் ருதுராஜ் அரைசதம் கடந்து அசத்தி வர, 8-ஆவது வீரராக வந்த டுவெய்ன் பிராவோ அதிரடியாக விளையாடி 3 சிக்ஸா்கள் உள்பட 23 ரன்கள் சோத்து ஆட்டமிழந்தாா்.
ஓவா்கள் முடிவில் ருதுராஜ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 88, ஷா்துல் தாக்குா் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மும்பை தரப்பில் ஆடம் மில்னே, ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா். பின்னா் 157 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பையில் சௌரவ் திவாரி அதிகபட்சமாக 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
எஞ்சியோரில் டி காக் 17, அன்மோல்பிரீத் 16, சூா்யகுமாா் யாதவ் 3, இஷான் கிஷண் 11, கேப்டன் கிரன் பொல்லாா்ட் 15, கிருணால் பாண்டியா 4, ஆடம் மில்னே 15, ராகுல் சாஹா் 0 என விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
சென்னை பௌலிங்கில் பிராவோ 3, தீபக் சாஹா் 2, ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.