ஐபிஎல் ஏலத்தில் முக்கிய ஆல்ரவுண்டரை இழந்த சென்னை அணி - புலம்பும் ரசிகர்கள்
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி தங்களின் முக்கிய ஆல்ரவுண்டரை இழந்துள்ளதால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இதில் சீனியர் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். அந்த வகையில் சென்னை அணி பிராவோ, உத்தப்பா , அம்பத்தி ராயுடு போன்ற வீரர்களை வாங்கியது.
ஆனால் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியதால் சிஎஸ்கேவின் பட்ஜெட் அடி வாங்கியது. இதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரின் பெயர் ஏல மேடைக்கு வந்தது.
61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஷர்துல் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். இதனால் அவரை ஏலம் எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளிடையே போட்டி ஏற்பட்டது.
ஏலத்தொகை ரூ.4 கோடியை தாண்டியதால் சென்னை அணி பின்வாங்க இறுதியாக ஷர்துல் தாக்கூரை 10.75 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியது. இவரை சென்னை அணி இழந்தது அந்த அணி செய்த தவறு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை அணி கேப்டன் தோனி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.