ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை அணி.. புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் ரசிகர்கள் கொண்டாட்டம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ராகுல் திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 26 ரன்களும் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் 43 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 40 ரன்களும் எடுத்து கொடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயூடு (10), சுரேஷ் ரெய்னா (11) மற்றும் தோனி (1) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், நீண்ட நேரம் தாக்குபிடித்த மொய்ன் அலி 32 ரன்கள் எடுத்ததன் மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களுக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

தோனி, ரெய்னா விக்கெட்டை இழந்த பிறகு சென்னை அணியின் வெற்றியும் கைவிட்டு போய்விட்டதாகவே சென்னை ரசிகர்களும் கருதியிருப்பார்கள், ஆனால் போட்டியின் 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி அடித்து மாஸ் காட்டிய ஜடேஜா போட்டியை மீண்டும் சென்னை பக்கம் கொண்டு வந்தார்.

இதனால் கடைசி ஒரு ஓவருக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. சுனில் நரைன் வீசிய கடைசி ஓவரில் சென்னை அணி கடுமையாக திணறினாலும், ஷர்துல் தாகூர் மூன்று ரன்களும், தீபக் சாஹர் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன்னும் எடுத்ததன் மூலம் கொல்கத்தா அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரில் 8வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதன் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்