தம்பி கொஞ்சம் கீழே போறீங்களா - புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு தேவ்தட் படிக்கல் 70 ரன்களும், விராட் கோலி 53 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், டூபிளசிஸ் 31 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய மொய்ன் அலி 23 ரன்களும், அம்பத்தி ராயூடு 32 ரன்களும், இக்கட்டான கடைசி நேரத்தில் பொறுப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 17 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரில் தனது 7வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் 14 புள்ளிகளுடன் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.