“சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா தேவையில்லை” - காரணத்தை சொன்னது சென்னை அணி நிர்வாகம்
சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைக்குள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து கொண்டது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது. குறிப்பாக சென்னை அணி கடைசி நேரத்தில் பல வீரர்களை அவர்களின் அடிப்படை தொகைக்கே ஏலத்தில் எடுத்தது.
ஆனால் அந்த அணி சுரேஷ் ரெய்னா மற்றும் டூபிளசியை ஏலத்தில் எடுக்காமல் விட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவர்களில் டூபிளசி பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க கடைசி வரை ரெய்னா விலை போகவில்லை. சென்னை அணியின் வரலாற்றில் மிக முக்கிய வீரரான ரெய்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் நொந்து கொண்டனர்.
சென்னை அணியின் முடிவை சென்னை ரசிகர்களே மிக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதாவது சென்னை அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது தங்களுக்கும் கடினமாக இருந்ததாகவும், அணியின் தேவையை கருத்தில் கொண்டே வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் ஏலத்தில் அவரை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிச்சயமாக சுரேஷ் ரெய்னா மற்றும் டூபிளசியை அனைவரும் மிஸ் செய்வோம் . சென்னை அணியில் அவர்களின் இடத்தை நிரப்புவது கடினமான செயல் எனவும் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.