ஹைதராபாத்தை வீழ்த்தி முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை...!
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் இன்று நடைபெற்றது. ஷார்ஜா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
அதிகப்பட்சமாக சஹா 44 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தவரை அதிகப்பட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ட்வைன் ப்ராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு கெய்க்வாட் - டூபிளிசிஸ் ஜோடி 75 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் 45 ரன்களிலும், டூபிளிசிஸ் 41 ரன்களிலும் அவுட்டாக சென்னை அணி எளிதில் வெல்லும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் மொயீன் அலி 17, ரெய்னா 2 ரன்களிலும் அவுட்டாக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் கேப்டன் தோனி - அம்பத்தி ராயுடு ஜோடி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. தோனி 14 ரன்களும், அம்பத்தி ராயுடு 17 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 2021 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.