காஜல் தமன்னாவை காட்டி பல கோடி கிரிப்டோ மோசடி - சிக்கலில் நடிகைகள்
கிரிப்டோ மோசடி வழக்கில் தமன்னா மற்றும் காஜலிடம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிப்டோ மோசடி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என மோசடியாளர்கள் பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமன்னா காஜல்
இந்த மோசடியில் பணத்தை இழந்ததாக புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அசோகன்(66), என்பவர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல கோடி லாபம் கிடைக்கும் என இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதனை உண்மை என நம்பிய அசோகன் தனது ஓய்வு ஊதிய பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.
அதன் பிறகு ,மோசடியாளர்கள் கூறிய ஆசை வார்த்தையை நம்பி 10 லட்சம் முதலீடு செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டு கோவையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தின் வக்க விழாவில் சினிமா நடிகை தமன்னா மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
3 மாதங்களுக்கு பிறகு மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடிகை கஜோல் அகர்வாலை வைத்து ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்களின் முதலீடுக்கு ஏற்ப 100 நபர்களுக்கு வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து, மும்பையில் சொகுசு கப்பலில் மிகப்பெரிய அளவில் விழா நடத்தி பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியுள்ளனர்.
காணாமல் போன இணையதளம்
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்கள் 2 கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் இந்த கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் பணம் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு சென்றது தெரிய வந்தது.
இதில், டி.சி எக்ஸ் என்ற ஒரு காயினை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பியுள்ளனர்.ஆனால் அந்த டிசிஎஸ் காயினை விற்பனை செய்ய முடியவில்லை.
முதலீடு செய்த தொகையை காட்டிலும் 9 கோடிக்கு மேல் இருப்பதாகஅஸ்பே என்கிற இணைய பக்கத்தில் காண்பித்தது. ஆனால் அதனை வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது மாற்ற முடியவில்லை. இந்நிலையில் திடீரென அஸ்பே என்கிற இணையதளம் காணாமல் போகியுள்ளது. இதனால் அதிச்சியடைந்த அசோகன் தன்னிடம் பேசிய நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் போனை எடுக்கவில்லை.
கைது
இதனால் சந்தேகமடைந்த அசோகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், கோவையில் நித்தீஷ் ஜெயின்(36) மற்றும் அரவிந்த் குமார்(40) என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த மோசடியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பணத்தை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இதன் தொடக்க விழாவில் பங்கேற்றதால் நடிகைகள் காஜல் மற்றும் தமன்னாவும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அவர்களிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.