“கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பில்லை” - ரிசர்வ் வங்கி கவர்னர் முதலீட்டாளர்களுக்கு கடும் எச்சரிக்கை
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலங்களில் உலகம் முழுவதும் பிரபலமான முதலீடாக திகழும் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் எப்போது அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் 2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கிரிப்டோகரன்சிக்கு 30 சதவிகித வரி விதிக்கப்பட்டதுடன், அதுதொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 1 சதவிகித டிடிஎஸ் பிடித்தமும் அறிவிக்கப்பட்டது.பலருக்கும் இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியாகவே இருந்த நிலையில், கிரிப்டோகரன்சி வர்த்தகங்களில் மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதால் அரசு இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் ரிஸ்க்குகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். மேலும் கிரிப்டோ முதலீடுகளும், முதலீட்டுச் சேவைகளும் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் இத்தகைய டிஜிட்டல் சொத்துக்களுக்கு எவ்விதமான அடிப்படை மதிப்பும் இல்லை என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.