இறந்த பிறகு மீண்டும் உயிர் பிழைக்க வேண்டுமா? - ரூ.1.73 கோடி வசூலிக்கும் நிறுவனம்
இறந்த பிறகு மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என கிரையோபிரிசர்வ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
கிரையோபிரிசர்வ்
மரணத்தின் அருகில் சென்று உயிர் பிழைத்தார் என சில செய்திகள் பார்த்திருப்போம். ஆனால் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று மரணித்த பிறகு மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என நம்புகிறது.
இந்த திட்டத்திற்கு 2 லட்சம் அமெரிக்கா டாலர்(இந்தியா மதிப்பில் ரூ.1.73 கோடி) வசூலிக்கிறது ஜெர்மனியை சேர்ந்த டுமாரோ பயோ(Tomorrow bio) என்னும் கிரையோபிரிசர்வ் நிறுவனம்.
600 பேர் விண்ணப்பம்
இதற்காக தற்போது வரை இறந்த 6 மனிதர்கள் மற்றும் 5 செல்லப்பிராணிகள் உடலை கிரையோனிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்து வருகிறது. 600 க்கும் மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாத மாதம் 50 டாலர் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இந்த செயல்முறையானது ஒரு மனிதர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட உடன் தொடங்குகிறது. இதயம் நின்ற இரு நிமிடங்களில், ரத்தம் உறைவதை தடுக்க உடலை ஐஸ் கட்டியில் வைத்து 0 டிகிரி வெப்பநிலைக்கும் கீழே கொண்டு செல்லப்படுகிறது.
செயல்முறைகள்
அதன் பின்னர் உடலில் உறுப்புகளை பாதுகாக்க உடலில் உள்ள நீர் மற்றும் ரத்தத்திற்கு மாற்றாக கிரையோபுரோடெக்டிவ் திரவத்தை உடலில் செலுத்தி வெப்பநிலையை -130 டிகிரி செல்சியஸிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் -196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கொண்டு செல்லப்பட்டு இதற்கென சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கிற்கு அவரது உடல் மாற்றப்படுகிறது.
எதிர்காலத்தில் புற்றுநோய் போன்று எந்த காரணத்தால் இறப்பு நிகழ்ந்ததோ அதற்கு மருத்துவ உலகில் தீர்வு காணப்பட்டிற்கும். அதே வேளையில் கிரையோபிரெசர்வேஷன் செயல்முறையை மீண்டும் தொடங்கிய கட்டத்திற்கே கொண்டுவரவும் வழி இருக்கலாம். அதற்கு இன்னும் 10 ஆண்டுகளோ 100 ஆண்டுகளோ 1000 ஆண்டுகளோ கூட ஆகலாம். அது வரை இந்த உடல்கள் இது போன்று பாதுகாக்கப்படுமாம். கிரையோபிரெசர்வேஷன் செயல்முறைக்கு பிறகு இதுவரை யாரும் உயிர்பிக்கப் படவில்லை.
நம்பிக்கை
ஆனால் இது சாத்தியம் தான் என அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் கெண்ட்சியோரா நம்பிக்கை தெரிவிக்கிறார். இது குறித்து பேசிய அவர், "2023 ஆம் ஆண்டு எலிகளின் சிறுநீரகங்களை 100 நாட்கள் வரை கிரையோஜெனிக் முறையில் சேமித்து வைத்து, பின்னர் மீண்டும் அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு சென்று கிரையோப்ரொடெக்டிவ் திரவங்களை அகற்றி, அவற்றை ஐந்து எலிகளுக்கு பொருத்தினர்.
30 நாட்களுக்குள் அந்த உறுப்புகளின் முழு செயல்பாடு மீட்டெடுக்கப்பட்டது. இது போல இன்னும் பல விஷயங்கள் உள்ளன. யாரும் அதை முயற்சிக்காததால் அது பயனளிக்காது என்ற எண்ணம் உள்ளது. முயற்சித்தால் தான் பயன்கள் தெரியும். பெரும்பாலான மருத்துவ முறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்போது அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்றன" என கூறியுள்ளார்.
விமர்சனம்
ஆனால் மற்ற விலங்குகளுக்கு பொருந்துகிற பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு பொருந்தாது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத என செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அப்படி இந்த செயல்முறை சாத்தியப்பட்டால் கூட அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். நமக்கு தெரிந்தவர்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
ஆனால் இதற்கு விண்ணப்பித்துள்ள 600 க்கும் மேற்பட்டோரின் சராசரி வயது 35தானாம். இந்த வாழ்க்கையை அனுபவித்த வாழ 80 ஆண்டுகள் போதாது, தனிப்பட்ட இலக்குகளை அடைவதற்காக இது என்னை ஈர்த்துள்ளது, எதிர்கால தொழில்நுட்பம், விண்வெளி சுற்றுலா போன்றவற்றை அனுபவிக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.