“மறைந்தார், மறக்கப்படவில்லை” - தாக்குதலில் உயிரிழந்த வீரரின் தங்கை திருமணத்தை நடத்திய சிஆர்பிஎஃப்
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த நண்பரின் வீட்டுத் திருமணத்தை பொறுப்புடன் நடத்தி முடித்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கடந்த ஆண்டு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சைலேந்திர பிரதாப் சிங் என்ற காவலர் உயிரிழந்தார்.
அவரது சகோதரி ஜோதியின் திருமணம் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.
அந்தத் திருமணத்தை மறைந்த காவலர் சைலேந்திர பிரதாப் சிங்கின் நண்பர்கள் சகோதரர் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தனர்.
ட்விட்டரில் சிஆர்பிஎஃப் பகிர்ந்த திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.
புகைப்படத்துடன் பகிரப்பட்ட ட்வீட்டில்,
"சிஆர்பிஎஃப் 110 பட்டாலியனைச் சேர்ந்த கேப்டன் சைலேந்திர பிரதாப் சிங் மறைந்திருக்கலாம். ஆனால் அவரை நாங்கள் யாரும் மறைக்கவில்லை. பிரதாப் சிங் மறைந்தார், மறக்கப்படவில்லை.
அதனால் தான் இன்று ஜோதியின் திருமணத்தை நடத்துகிறோம்" என்று பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், ஜோதிக்கு வீரர்கள் திருமணப் பரிசுகளையும் அள்ளி வழங்கினர். இது குறித்து பிரதாப் சிங்கின் தந்தை,
"எனது மகன் இந்த உலகத்தில் இல்லை. ஆனால், எனக்கு இன்று நிறைய மகன்கள் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூலம் கிடைத்துள்ளனர்.எங்களின் சுக, துக்கங்களில் இவர்கள் துணை நிற்கின்றனர்" என்று கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் சைலேந்திர பிரதாப் சிங் உள்பட இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.