சிறுவர்களுக்கு தின்பண்டம் தராமல் தீண்டாமை - குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை
பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தராமறுத்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தின்பண்டம் தராமல் தீண்டாமை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் பட்டியலின சிறுவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க சென்ற போது கடை உரிமையாளர் மகேஸ்வரன்,
அந்த சிறுவர்களிடம் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது எனக் கூறி இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் போய் சொல்லுங்கள் என்று கூறும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியரின் பேரில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி பெட்டிக்கடைக்கு சீல் வைத்தார்.
இந்த நிலையில் கடை உரிமையாளர் மகேஸ்வரன், மற்றும் ராமசந்திரமூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐஜி அதிரடி உத்தரவு
இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.