கோவையில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்களுக்கு விரைவில் முடிவு - புதிய போலீஸ் கமிஷனர் உறுதி
கோவையில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு விரைவில் முடிவுக் கட்டப்படும் என புதிய காவல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த 17 வயது மாணவி ஆசிரியர் பாலியல் தொந்தரவு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சில நாட்களில், கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வந்த ரகுநாதன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்து வந்த தீபக் தமோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்ட பிரதீப்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் சென்னையை அடுத்து கோவை மிக முக்கிய மாநகரமாகும். எனவே இங்கு சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும். நகரம் அமைதியாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு வித்தியாசமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் குழந்தைகள் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றத்திலிருந்து அவர்களை பாதுகாக்க சரியான விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் எனது நேரடி கண்காணிப்பு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தொடரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை குறைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரை ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதீப்குமார் தெரிவித்தார்.