புனேவில் மாடல் பெண்ணை நடிகையாக்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
சினிமாவில் பெரிய நடிகையாக்குவதாக கூறி, மாடல் பெண்ணை ஏமாற்றி 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் புனேவில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹடப்சரைச் சேர்ந்த 25 வயது மாடல் பெண், தன்னை நடிகையாக்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று ஆண்கள் மீது கடந்த வாரம் புகார் அளித்தார்.
அவரது புகாரைத் தொடர்ந்து, வர்ஜே போலீசார், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
2017 ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று பேர் மாடல் பெண்ணை போட்டோஷூட் செய்தபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அவரிடமிருந்து ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்றார்.
திரைப்படங்களில் நடிகையாக வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏற்கெனவே ரூ.6 லட்சம் வாங்கியுள்ளனர். மாடல் பெண், நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் திரைப்படத் தயாரிப்பில் பணியாற்றுகிறார். ஒரு குறும்படத்தின் படப்பிடிப்பின் போது அவரை சந்தித்தார்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இதேபோன்ற மற்றொரு வழக்கில், ஹிந்தித் திரையுலகில் முத்திரை பதிக்கப் போராடும் நடிகர் ஒருவர், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறைந்தபட்சம் 80 பேரிடம் இருந்து 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக மும்பையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.