பெற்ற மகனையே கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்த கொடூரத் தாய் - அதிர்ச்சி சம்பவம்

murder crime police investigation shocking news mother killed son
By Nandhini Jan 12, 2022 07:02 AM GMT
Report

மது போதைக்கு அடிமையான லாரி உரிமையாளரை பெற்ற தாயே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், வடக்கு ஈச்சம்பட்டில் கடந்த 9ம் தேதி லாரி உரிமையாளரான சதீஸ் குமார் நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்டார்.

மண்ணச்சநல்லூர், கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம். இவருடைய மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு அமிர்தராஜ், சதீஸ்குமார் என 2 மகன்கள் உள்ளனர்.

சதீஷ்குமார் (32). சொந்தமாக லாரி ஓட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், 2 வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் இருக்கின்றனர்.

சதீஷ்குமார் சொத்தில் பங்கு கேட்டதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாக்குடியில் உள்ள நிலத்தை ரூ.1. 25 கோடிக்கு விற்று அண்ணன், தம்பி என இருவருக்கும் தலா ரூ.40 லட்சம் பணம் கொடுத்துள்ளனர் பெற்றோர்கள்.

மதுவுக்கு அடிமையான சதீஷ்குமார் பணத்தை எல்லாம் செலவழித்து விட்டு தன் தாயிடமிருந்த மீதி பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இவரின் அட்டகாசம் தாங்க முடியாத தாய் அம்சவள்ளி சதீஸ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

சதீஸ்குமாரின் நண்பரான புல்லட் ராஜா மூலம் கொலை செய்ய சொல்லி அதற்கு ரூ. 5 லட்சம் பேரம் பேசி, ரூ. 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் கொலை செய்ய திட்டமிட்ட நண்பர் புல்லட் ராஜா மற்றும் நண்பர்கள் கடந்த 7ம் தேதி மதியம் சதீஸ்குமாருடன் டாஸ்மாக்கில் மது அருந்தி கொண்டிருந்தனர். பின்னர் மாலையில் வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில் அனைவரும் மது அருந்தினார்கள்.

மதுபோதையின் உச்சத்திலிருந்த சதீஷ்குமாரை ஏரியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து நண்பர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து கொலை பற்றி தெரியாமல் இருக்க கம்பியால் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் கல்லை கட்டி 10 அடி ஆழ தண்ணீரில் வீசியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி சதீஷ்குமாரின் அண்ணன் அமிர்தராஜ் மண்ணச்சநல்லூர் போலீசில் சதீஷ்குமாரை காணவில்லை என்று புகார் கொடுத்தார். புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காணாமல் போன சதீஷ்குமார் என்று தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். மது அருந்த சென்ற நண்பர்களை பிடித்து விசாரணை செய்ததில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

புல்லட் ராஜா (41), கொத்தனார் ராஜா (31),சுரேஷ் பாண்டி என்கின்ற சுரேஷ், ஷேக் அப்துல்லா (45), அரவிந்த்சாமி (19) தாய் அம்சவள்ளி (59) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.