வளைகாப்பு விழாவில் கத்திக்குத்து - பெண்ணின் அண்ணன் கைது
விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் இன்று கர்ப்பிணி பெண்ணுக்கு நடைபெற்ற வளை காப்பு நிகழ்ச்சியின் போது கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ,நெய்வேலி பழையபாப்பன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலைமணி மகன் கர்ணன் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் கவுசிகா என்பவரை 10-மாதங்களுக்கு, முன்பு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சிறிது நாட்களுக்குப் பின் இருவரும் விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே கவுசிகா கர்ப்பமான நிலையில், அவருக்கு வளைகாப்பு விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அச்சடித்த கர்ணன், தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அளித்து அழைத்துள்ளார்.
அதன்படி இன்று விருத்தாசலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுசிகாவிற்கு வளைகாப்பு விழா நடைபெற்று வந்துள்ளது.
அப்போது அங்கு வந்த கவுசிகாவின் சகோதரர், வினோத் என்பவர், விழா நடைபெற்ற இடத்திற்குச் சென்று, வளைகாப்பு விழா அழைப்பிதழில் தனது பெற்றோரின் பெயரை எப்படி அச்சடிக்கலாம் எனக் கூறி, கவுசிகா மற்றும் அவரது கணவர் கர்ணன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது மண்டபத்தில் இருந்தவர்களில் ஒருவரான சிலம்பரசன், என்பவர் தகராறை விலக்க சென்றபோது, வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிலம்பரசனை குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள், சிலம்பரசனை மீட்டு முதலுதவி செய்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர்.