ஏன் சார் நாங்கல்லாம் கார் வெச்சுக்கக் கூடாதா?- பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை

politics crime tamilnadu tn police based on caste caste attack
By Swetha Subash Dec 08, 2021 07:28 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலர், நடுரோட்டில் நிர்வாணமாக்கித் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மதுக்கூர் அருகேயுள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் சதீஷ். கடந்த பத்தாண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த இவர் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அவரது திருமணத்துக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.

திருமணம் முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சதீஷ் இதுகுறித்து பேசும்போது 'கல்யாணத்துக்குப் பிறகு திரும்பவும் வெளிநாடு போறதுக்காக, ஏஜென்ட் ஒருத்தரைப் பார்க்குறதுக்கு தொண்டராம்பட்டு கிராமத்துக்கு என்னோட காருல போனேன்.

அப்போ அந்தப் பக்கமா வந்த என்னோட அண்ணன் ராஜேஷ், என்னைப் பார்த்துட்டு என் காருக்குப் பின்னாலேயே டூ வீலரை நிறுத்திட்டு வந்தார். ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருந்தோம்.

நான் காரை ரிவர்ஸ் எடுத்தப்ப, பின்னாடி நின்ன என் அண்ணனோட டூ வீலர் மேல மோதினதுல கீழே விழுந்துடுச்சு. அந்த இடத்துல குடிபோதையில நின்ன மூணு பேரு, 'ஏன் டூ வீலர்ல இடிச்ச?'னு கேட்டாங்க.

'தெரியாம இடிச்சுட்டேன். அதுவும் எங்க வண்டிதான் பிரச்னை ஒண்ணும் இல்லை'னு சொன்னதுக்கு, 'வேற யார் வண்டியாச்சும் நின்னுருந்தா?'னு கேட்டாங்க.

'தெரிஞ்சே இடிப்பாங்களா? எங்க வண்டி நாங்க பேசிக்குறோம்'னு சொன்னதுக்கு, 'என்னடா எதிர்த்து பேசுற... எந்த ஊர்டா நீ?'னு ஒருமையில் பேச ஆரம்பிச்சாங்க.

பிறகு என்னைய ,தகாத வார்த்தைகள்ல பேசிக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சாங்க என வேதனையாக கூறினார்.

மேலும் கூறுகையில், :

அப்போ அங்க வந்த அ.ம.மு.க ஒரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பி, அவங்ககிட்ட என்னன்னு கேட்டார். என் சாதியைச் சொல்லி, 'நம்மளை எதிர்த்துப் பேசுறான்'னு சொன்னாங்க.

உடனே கார் சாவியைப் பிடுங்கிய ஆசைத்தம்பிகிட்ட, 'நான் எந்த வம்பும் செய்யலை என்னை அடிக்குறதுக்கு என்ன உரிமை இருக்கு?'னு கேட்டேன்.

'ஒன்றியத்தையே எதிர்த்து பேசுறியா?'னு ஆசைத்தம்பியும் மத்தவங்களும் என் வேட்டி, சட்டையைக் கிழிச்சு எறிஞ்சாங்க.

எந்தத் தப்புமே செய்யாத என்னை அம்மணமாக்கி அடிச்சதுக்கு, அவங்க பதில் சொல்லியே ஆகணும். அதுக்காகத்தான் அவங்க மேல பிசிஆர் கேஸ் கொடுத்தேன். மூணு பேர் மேல மட்டும் கேஸ் போட்ட போலீஸ்காரங்க, ஆசைத்தம்பி உள்ளிட்டவங்களை விட்டுட்டாங்க.

ஏன் சார் பட்டியல் சமூகத்துல பொறந்தா கார் வெச்சுக்கக் கூடாதா?'' என கேட்கிறார் கண்ணீரோடு.